இனி திருப்பதிக்கு அடிக்கடி போகலாம்! காட்பாடி-திருப்பதி இடையே இரட்டை ரயில் பாதை- மத்திய அரசு ஒப்புதல்!
Tirupati-Pakala-Katpadi Railway Line: திருப்பதி-பகாலா-காட்பாடி இடையே ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையம் இடையிலான ஒற்றை ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த திட்டமானது சுமார் 1, 332 கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
திருப்பதி - காட்பாடி இரட்டை ரயில் பாதைக்கு ஒப்புதல்:
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டமானது நடைபெற்றது. இதில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் ரயில் திட்டங்களை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, திருப்பதி - பகாலா - காட்பாடி ஒற்றை ரயில் பாதைப் பிரிவு (104 கி.மீ) இரட்டிப்பாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்கு தோராயமாக ரூ.1332 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி - காட்பாடி இணைக்கும் ஒற்றை ரயில் பாதையை இரட்டிப்பாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டம் இருக்கும். இந்த இரட்டை ரயில் பாதை மூலம் 400 கிராமங்கள் மற்றும் 14 லட்சம் மக்களை இணைக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக சுற்றுலா:
இந்த இரட்டை ரயில் பாதை திட்டத்தால், திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலுடன் இணைப்பதோடு, ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில், காணிப்பாக்கம் விநாயகர் கோயில், சந்திரகிரி கோட்டை போன்ற பிற முக்கிய இடங்களுக்கும் ரயில் இணைப்பை வழங்குகிறது. இது நாடு முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆன்மீக சுற்றுலா வளர்ச்சி பெறுவதுடன், மாநிலங்கள் பொருளாதாரத்திற்கும் வளர்ச்சியை ஊக்குவிக்க்கும்.
வர்த்தகம் மேம்படும்:
மேலும், இப்பகுதியானது நிலக்கரி, விவசாயப் பொருட்கள், சிமென்ட் மற்றும் பிற கனிமங்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்துக்கு இது ஒரு அத்தியாவசிய பாதையாகும். இதன்மூலம் திறன் அதிகரிப்பு பணியின் விளைவாக ஆண்டுக்கு 4 மில்லியன் டன் அளவிலான கூடுதல் சரக்கு போக்குவரத்து ஏற்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஆற்றல் திறன் கொண்ட போக்குவரத்து முறையாக இருக்கும் ரயில்வே, காலநிலை இலக்குகளை அடைவதற்கும், நாட்டின் தளவாடச் செலவைக் குறைப்பதற்கும், 4 கோடி லிட்டர் அளவிலான எண்ணெய் ( எரிபொருள் ) இறக்குமதியைக் குறைப்பதற்கும் மற்றும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கும் உதவும். இது ஒரு கோடி மரங்களை நடுவதற்கு சமம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்நிலையில், ஒற்றை ரயில் இரட்டை ரயில் பாதையாக மாறுவதால், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலா அதிகரிப்பது மட்டுமன்றி, இதர மாநிலங்களில் இருந்து வரும் மக்களும் ஆன்மீக மற்றும் இதர வர்த்தகமானது மேம்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதனால், வேலைவாய்ப்பானது அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















