‘துணிவு’ சிறப்புக் காட்சி டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை - ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம்
திண்டிவனத்தில் துணிவு பட சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்ததால் அஜித் ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம்.
2023ம் ஆண்டு வரப்போவது வாரிசு பொங்கலா அல்லது துணிவு பொங்கலா என்று பெரிய யுத்தமே நடந்து வருகிறது. தனது நடிகர்களுக்கு ரசிகர்கள் பலரும் விதவிதமாக வீதியெங்கிலும் கட் அவுட்டுகள் வைத்து அலப்பறை செய்து வருகின்றனர். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்துள்ள 'துணிவு' படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், அமீர், பாவ்னி, சிபி சந்திரன் மற்றும் மமதி சாரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையில் 'துணிவு' படத்தின் பாடல்கள் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று ட்ரெண்டிங்காகியுள்ளது. இப்படத்தில் 13 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டுள்ளது மற்றும் வடக்கன் என்று வட இந்தியர்களை கேலி செய்யும் விதமாக இடம்பெற்றிருந்த வார்த்தையும் திருத்தியமைக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் 'துணிவு' படம் ஜனவரி 12ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது படம் ஜனவரி 11ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. 'துணிவு' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது,
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள தனியார் திரையரங்கில் துணிவு பட சிறப்புக் காட்சிக்கு டிக்கெட்டின் விலை 200 ரூபாய் அச்சிடப்பட்ட நிலையில் டிக்கெட் கூடுதலாக 500 மற்றும் 1000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரோசனை காவல் ஆய்வாளர் திரையரங்கில் விசாரணை செய்தார். இதனையடுத்து படத்தின் டிக்கெட் அச்சிடப்பட்ட 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அச்சிடப்பட்ட விலைக்கு மேல் ஆகிய தொகை திருப்பி தரப்பட்டது. அஜித் ரசிகர்கள் அங்கிருந்து கலந்துச் சென்றனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.