Thiruvallur: திருவள்ளூர் பள்ளி மாணவி உயிரிழப்பு... சந்தேக மரணமாக வழக்குப்பதிவு - டிஐஜி
திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 12 வகுப்பு மாணவி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியின் விடுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டிஐஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”இன்று காலை எங்களுக்கு 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்ததாக புகார் ஒன்று வந்தது. அதைத் தொடர்ந்து நாங்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சென்று விசாரணை நடத்தினோம். அங்கு நாங்கள் நடத்திய விசாரணையில் அந்த மாணவியின் உயிரிழப்பில் பலரும் சந்தேகம் எழுப்பினர். அந்த மாணவியின் உடல் தூக்கிட்ட நிலையில் தான் மீட்கப்பட்டது. எனினும் பலர் சந்தேகம் எழுப்பியதன் காரணமாக இந்த வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன..?
திருவள்ளூவரில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், இன்று காலை வழக்கம் போல் விடுதியில் இருந்து பள்ளிக்குச் செல்ல, சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சக நண்பர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், விடுதியில் தனியாக இருந்த அந்த மாணவி சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த திருவள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திர தாசன், உதவி தலைமை காவல் ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிசி கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பள்ளி நிர்வாகம் முறையான தகவல்களை அளிக்கவில்லை என்று கூறி, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர், பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பதற்றத்தை தவிர்க்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்