(Source: ECI/ABP News/ABP Majha)
RSS Rally: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு மேல் முறையீடு..
ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மார்ச் 5-ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி தரக்கோரி டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அனுமதி தர மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது. பிப்ரவரி 15,19, மார்ச் 5-ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி கோரியும் டிஜிபி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. தமிழ்நாட்டில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்து, இதர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த முறை நீதிபதிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க ஆர்.எஸ்.எஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட வாரியாகத்தான் முடிவு எடுக்க முடியும் என்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்தது.
அதேபோல் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து மத நம்பிக்கைகளையும் பாதுகாத்து தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். அதனால் தான் முன்னெச்சரிக்கையாக உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையி்ல் தமிழ்நாடு அரசு செயல்படுவதாகவும், போராட்டங்களுக்கு மட்டுமே அனுமது வழங்கப்பட்ட நிலையில், ஊர்வலம் செல்ல எந்தவித அனுமதியும் யாருக்கும் வழங்கவில்லை என குறிப்பிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பேரணியை அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். அதேசமயம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மார்ச் 5-ஆம் தேதி பேரணி நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி தரக்கோரி டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.