Palani Kumbabishekam: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு சிறப்பு ரயில்.. எந்தெந்த தேதிகளில்? எந்த ஊர்களிலிருந்து ? முழு விவரம்..
Palani Kumbabishekam 2023: பழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி உலகப் புகழ் பெற்றது. இங்கு தண்டாயுதபாணியாக முருகன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். எப்போதும் உள்ளூர், வெளியூர் பக்தர்களால் நிரம்பி வழியும் பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷேக விழாவை காண முன்பதிவு செய்த 51 ஆயிரம் பக்தர்களில் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே மலைக்கோயிலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற பக்தர்கள் விழாவை காண வசதியாக மலை அடிவாரம் தொடங்கி பேருந்து நிலையம் வரை 16 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட காலை 8 மணிக்கு கோயிலின் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்ட நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் கோயில் கலசங்கள், கோபுரங்களுக்கு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் கும்பாபிஷேக மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை முதல் பழனிக்கும் மற்றும் திண்டுக்கல் முதல் கோவை வரை பழனி வழியே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை-பழனி இடையே இயக்கப்படும் ரெயில் (எண் 06080) மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது. சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து ரெயில் (எண் 06079) மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறது.
இதேபோல் கோவை-திண்டுக்கல் ரெயில் (எண் 06077) காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 06078) மதியம் 2.55 மணிக்கு பழனி வருகிறது. பின்னர் 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.