Udhayanithi Stalin: "மக்களுடன் முதல்வர் திட்டம்; 30 நாட்களுக்குள் தீர்வு" -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என்று மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 13 அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையங்களை பார்வையிட்ட அவர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பதிவு செய்யும் விதம், அதற்கு தீர்வு காண எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் அளித்த மனுக்களில் இருந்து 34 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், காதொலிக் கருவி, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, தமிழம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கியுள்ளது.
பொதுமக்களுக்கான 100-க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கும் 13 அரசுத்துறைகள் சார்பில் ஜனவரி 6-ம் தேதி வரை காலை 10 மணி முதல் 3 மணி வரை மனுக்கள் பெறப்படும். பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாகவும் மனுக்களை வழங்கலாம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என சேலம் மாவட்டத்தில் 142 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது என்று மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சித் துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.