Crime: நகையை திருடி படம் எடுத்த நடிகர்; குடும்பத்தோடு போலீசாரிடம் சிக்கியது எப்படி?
பெண்களிடம் நகைப்பறித்து திரைப்படம் எடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெண்களிடம் நகைப்பறித்து திரைப்படம் எடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. அவரது மனைவி மாரி என்ற முத்துமாரி (வயது 57). கடந்த வாரம் முத்துமாரி தனது வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த போது இருச்சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் எடையுள்ள தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
இதேபோல் கோவில்பட்டி கதிரேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவரது மனைவி வெள்ளைத்தாய். ஏ.கே.எஸ் திரையரங்க சாலையில் வெள்ளைத்தாய் நடந்து சென்ற போது இருச்சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவர் அணிந்துருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வர, இதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். நகை பறிப்பு சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். இந்த நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டம் பச்சையங்கொட்டை காந்தி நகரை சேர்ந்த பிரூஷா மகன் சனாபுல்லா (42 வயது), அவருடைய மகன் ஜாபர் (19 வயது ) என்பதும் தெரிய வந்தது. மேலும் சனாபுல்லா மனைவி ரஷியா (38 வயது) துணைப்போனதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இவர்கள் மகாராஷ்டிராவை பூர்விகமாக கொண்டவர்கள். கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல்லில் வசித்து வந்துள்ளனர். இதில் துணை நடிகரான சனாபுல்லா மற்றும் ஜாபர் தனியாக நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு அவர்களிடமிருந்து நகையை பறித்து விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ‘நான் அவந்தான்’ என்ற படத்தை எடுத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சனாபுல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியிட இருந்த நிலையில் அவர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சனாபுல்லா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் நேற்று கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி கடற்கரை செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி இவர்களுடன் இணைந்து நகை பரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CM Stalin on BJP: ”பாஜகவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி இது” - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்