Annamalai Condemns: ”எதிர் குரல்களை கைது செய்து நசுக்க நினைக்காதீங்க” - எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு கொந்தளிக்கும் அண்ணாமலை
தமிழக பாஜக பிரமுகர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டதற்கு, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக பிரமுகர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டதற்கு, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.
விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்” என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
எஸ்.ஜி. சூர்யா கைது:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து, அவதூறு வழக்கில் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்பு திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கு:
எஸ். ஜி. சூர்யா மீது 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, இருபிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் எஸ்.ஜி. சூர்யா கைதுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடரும் கைது நடவடிக்கை:
இதனிடையே, கடந்த சில நாட்களாகவே பாஜக பிரமுகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியை சேர்ந்த செல்வ பாலன், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பியதா காஞ்சிபுரம் பாஜக தலைவர் என அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.