High Court Bench: தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு.. தொடக்க கல்வி இயக்குனருக்கு ரூ.10 அயிரம் அபராதம்..
தாமதமாக பதில் மனு தாக்கல் செய்த தொடக்க கல்வி இயக்குனருக்கு ரூ.10 அயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 வருடம் காலதாமதமாக நீதிமன்றத்திற்கு பதில் மனு தாக்கல் செய்த தொடக்கக் கல்வி இயக்குனருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரோகினி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், தனக்கு அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்க வேண்டும். எனவே ஒப்புதல் வழங்க கோரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது.
விண்ணப்பம் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளதால் தனது பணி ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பே ஊதியம் வழங்கப்படும் என்பதால், ஆசிரியராக பணி நியமிக்க அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி கடந்த 2019 ம் ஆண்டு மனு செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் பதிலளிக்க கடந்த 2019 உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது 2019 ஆம் ஆண்டு அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தாமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு தரப்பில் வழக்கு குறித்து அளிக்கப்பட்டுள்ள பதிலிலும் திருப்தி அளிக்கவில்லை. மேலும் நான்கு வருட காலங்கள் தாமதமாக பதிலளித்த தொடக்கக் கல்வி இயக்குனருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதனை வழக்கறிஞர்கள் நலன் நிதியில், இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு அக்டோபர் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.