TN Rain Alert: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வேப்பூரில் கொட்டித்தீர்த்த மழை.. நிலவரம் என்ன?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று மே 23, 2024 மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை (மே 24 ஆம் தேதி) காலை வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து 25 ஆம் தேதி மாலைக்குள் வடகிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் நிலைக்கொள்ளக்கூடும்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரிய அளவு மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நெல்லை, குமரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பதிவாகி வருகிறது.
அந்த வகையில் இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) 20, காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) 18, விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) 17, மைலாடி (கன்னியாகுமரி மாவட்டம்) 14, லக்கூர் (கடலூர் மாவட்டம்), தொழுதூர் (கடலூர் மாவட்டம்) தலா 13, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்) 12, தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) தலா 12, வால்பாறை பிஏபி (கோயம்புத்தூர் மாவட்டம்), கொடநாடு (நீலகிரி மாவட்டம்) தலா 11, அவினாசி (திருப்பூர் மாவட்டம்), கெத்தை (நீலகிரி மாவட்டம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) தலா 10, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்), வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்), புகையிலை நிலையம் (விடிஆர்) (திண்டுக்கல் மாவட்டம்) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.