மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,154 கன அடியில் இருந்து 1,926 கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக 10,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 2,096 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,154 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,926 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 114.21 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 84.53 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீர் 600 கன அடியாக இருந்த நிலையில் 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா, தாளடி சாகுபடிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.1 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 47.10 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,655 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,448 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.05 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 18.89 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 329 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.