DGP: ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள்.. அதிரடி உத்தரவிட்ட டிஜிபி...
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார்.
அந்த வகையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த முறை மழையில் சிக்கிய ரசிகர்களுக்கு இம்முறை மழை பெய்தால் தற்காத்துக்கொள்ள ரெயின்கோட் வழங்கப்பட்டது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்தான்.
ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான ரூபாயில் டிக்கெட் விற்கப்பட்ட நிலையில், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது, முறைப்படி பார்க்கிங் வழங்காதது என வெளியிலேயே பிரச்சினை ஏற்பட தொடங்கியது.
தொடர்ந்து உள்ளே சென்றால் குறிப்பிட்ட டிக்கெட் வாங்கிய இடத்துக்கு செல்ல முடியாத அளவுக்கு ரசிகர்கள் முண்டியடித்தனர். உண்மையில் அனைவருமே டிக்கெட் பெற்றவர்கள் தானா? என்ற கேள்வியும் எழுந்தது. கைக்குழந்தைகள், சிறுவர் - சிறுமியர்கள், பெண்கள், வயதானவர்கள் என பலரும் இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டனர். குழந்தைகள் மூச்சுவிட கூட முடியாமல் அழுத வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சங்கர் ஜிவால். இது தொடர்பான செய்தி குறிப்பில், ” சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூர் பகுதியில் 10.09.2023 அன்று மாலை நடைபெற்ற இசைக்கச்சேரியின் போது அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை செய்ய தாம்பரம் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்திற்கான காரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இந்நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாத வண்ணம் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் காவல் துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.