கடலூர் எம்பி ரமேஷை ஒரு காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி
’’எம்பி ரமேஷ் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்ததால், நீதிபதி பிரபாகரன் சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க ஒருநாள் அனுமதி வழங்கி உத்தரவு’’
கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக மர்ம மரணம் என்று காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின் கோவிந்தராஜின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இறந்த கோவிந்தராஜின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது.
அதற்குப்பின் கடந்த மாத இறுதியில் இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டார், அதன்படி வழக்கானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு ADSP கோமதி தலைமையில் 5 ஆய்வாளர்கள் கொண்ட குழு பண்ருட்டியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர். இதில் முதற்கட்டமாக கோவிந்தராஜ் அவர்களின் மகன் மற்றும் காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) நந்தகுமார், சிறப்பு துணை ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் பாஸ்கர், உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் காடாம்புலியூர் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையின் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கு பின் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட இறந்த கோவிந்தராஜ் அவர்களின் பிரேத பரிசோதனை மற்றும் காடம்புலியூர் காவல் நிலையத்தில் காயங்களுடன் இருக்கும் கோவிந்தராஜின் புகைப்படம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடலூர் எம்பி ரமேஷ் அவர்களின் முந்திரி தொழிற்சாலை பணிபுரியும் ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கோவிந்தராஜ் எம்பி ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலை ஊழியர்களால் கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்து, கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் எம்பி ரமேஷை தவிர மற்ற 5 பேர் கைது செய்யபட்டு கடந்த 5 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான எம்பி ரமேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார், பின் வழக்கினை விசாரித்த நீதிபதி எம்பி ரமேஷ் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பின் இன்று சிறைச்சாலையில் இருந்து கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் எம்பி ரமேஷ் ஆஜர்படுத்தப்பட்டார், இந்நிலையில் அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை அனுமதி கோரி இருந்தனர், இந்நிலையில் எம்பி ரமேஷ் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்ததால், நீதிபதி பிரபாகரன் சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க ஒருநாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.