![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Assembly: ’அரசியல்வாதியாக பேசுகிறார் ஆளுநர்.. கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்’.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு
ஆளுநர் கட்சி சார்பின்றி நடந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
![TN Assembly: ’அரசியல்வாதியாக பேசுகிறார் ஆளுநர்.. கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்’.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு The Chief Minister said in the Tamil Nadu Legislative Assembly that the Governor should act without party affiliation. TN Assembly: ’அரசியல்வாதியாக பேசுகிறார் ஆளுநர்.. கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்’.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/10/f56d8b8adc4e1e8bebb9d3c27191f00c1681107472785589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட மசோதாவிற்கு, ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஆளுநரின் செயல் குறித்து பேரவையில், முதலமைச்சர் தலைமையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தனித்தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர், சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு இடையூறு செய்தால், கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஆளுநர் கட்சி சார்பின்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தினசரி ஒரு கருத்தை தெரிவித்து ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆளுநர் அரசியல்வாதியாக பேசுகிறார் என தெரிவித்தார்.
”தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள அரசுக்கு, தமிழ்நாடு மக்களின் தமது எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும், ஜனநாயகரீதியான கடமையும் உள்ளதாகவும், இவற்றைக் கருத்தில்கொண்டு, இந்தச் சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்காமல், காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை வருத்தத்துடன் பதிவு செய்வதாக” தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ”தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை (Supremacy of Legislature) சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும்” முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
”எனவே, மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவது என்றும், மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாகவும்” முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)