’கோயில்கள் திறக்கபோவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு பாஜக போராட்டம் நடத்தியது’- கே.என்.நேரு
’’ஒரு ஓட்டு, 4 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் தோற்றுள்ளதை பார்த்தே உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடந்துள்ளதை புரிந்து கொள்ளலாம்’’
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் 4.50 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி பணியை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிராட்டியூர், கருமண்டபம் பகுதிகளுக்கு ஏற்கனவே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சரியாக தண்ணீர் செல்வதில்லை பம்பிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த குறையை போக்க இன்று புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முதல்வர் நகராட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே நகராட்சி தேர்தல்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதற்காகத்தான் கும்பகோணம் மாநகராட்சி மற்றும் 19 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தை விட தேர்தல் ஆணையம் இப்போது சுத்தமாக உள்ளது. அதிகாரிகள் நேர்மையாக உள்ளனர். ஆகையால்தான், 4 வாக்கு, 1 வாக்கு வித்தியாசத்தில் கூட திமுக வேட்பாளர்கள் தோற்றுள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டது; தேர்தல் ஆணையத்துடன் கலந்துபேசி தேர்தல் நடத்தப்படும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மிக நேர்மையாக நடைபெற்றது. தோல்விக்கு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக அதிமுக குறை சொல்கிறது. தமிழகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார் மேலும் இந்த ஆட்சி நேர்மையாக நடைபெற்று வருவதாகவும் இதன் காரணமாகவே தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு மக்கள் மகத்தான வெற்றியைத் தந்துள்ளனர்.
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியும். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் சிறையில் அடைத்து அவர்கள் வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டனர். அவர்களைப் போலவே எங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி தேர்தல் ஆணையம் இருந்ததோ அதை விட தற்போது சுத்தமாகத்தான் உள்ளது. பக்தர்கள் சிரமம் போக்க, அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க முதலமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர். இதை தெரிந்து கொண்டு பா.ஜ.க போராட்டம் நடத்தி, எங்களால்தான் கோயில் திறக்கப்பட்டது என்கிறார்கள். மேலும் திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் உள்ளிட்டவற்றிற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன. முதல்வர் விரைவில் வந்து அடிக்கல்நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.