நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மூலமாக செக் வைத்த பாஜக..!
ஏ.கே.ராஜன் குழுவை கலைக்கக்கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது
நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டிருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். நீட் விவகாரத்தில் மாநில அரசு அரசியலாக்கி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை உறுதி செய்ய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் உள்ளதாகவும் நீட் குறித்து தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜனின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசுத்தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படும் நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறதே அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்
இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆளுங்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கொள்கை முடிவை எடுக்கவே இந்த குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதால் இது குறித்து ஒருவாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது