Minister I. Periyasamy: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மீண்டும் செக்! விடுவிக்கப்பட்டது செல்லாது - உயர்நீதிமன்றம் அதிரடி
Minister I. Periyasamy: முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
![Minister I. Periyasamy: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மீண்டும் செக்! விடுவிக்கப்பட்டது செல்லாது - உயர்நீதிமன்றம் அதிரடி The acquittal of DMK Minister I. Periyasamy in the corruption case is invalid - chennai High Court takes action Minister I. Periyasamy: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மீண்டும் செக்! விடுவிக்கப்பட்டது செல்லாது - உயர்நீதிமன்றம் அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/1b12109304d677a0ff59f193addb46ad1708924760764732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Minister I. Periyasamy: வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். வரும் ஜுலை மாதத்திற்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடிப்பதோடு, மார்ச் 28ம் தேதிக்குள் அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் ஆஜராகி ஒரு லட்ச ரூபாயை பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரசியலில் இருப்பவர்கள் மக்கள் மத்தியில் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும், பதவியில் இருப்பவர்கள் மீதும் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச்சாட்டு என்ன?
தற்போது கூட்டுறவு அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி, கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி அமைச்சராக இருந்தார். அப்போது, 2008ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரிய வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு ஐ.பெரியசாமி முறைகேடாக ஒதுக்கியதாகப் புகார் எழுந்தது. 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த வழக்கைத் தொடர்ந்தனர். முதலில் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.
வழக்கின் பின்புலம்:
இந்த நிலையில் தான், அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டது தொடர்பான வழக்கை, கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். அதன்படி, வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார். அதைதொடர்ந்து வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
திமுக ஷாக்..!
ஏற்கனவே, லஞ்ச புகாரில் கைதான செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இழந்தார். மற்றொரு முறைகேடு வழக்கில் பொன்முடியும் தனது அமைச்சர் பதவியை இழந்தார். இந்நிலையில் தான், அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கையும் மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து வழக்கில் சிக்குவது திமுகவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)