Thagaisal Meaning: தமிழ்நாடு அரசு அறிவித்த ’’தகைசால் தமிழர்’’ விருது : ’’தகைசால்’’ என்றால் என்ன?
தகைசால் தமிழர் விருதிற்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
![Thagaisal Meaning: தமிழ்நாடு அரசு அறிவித்த ’’தகைசால் தமிழர்’’ விருது : ’’தகைசால்’’ என்றால் என்ன? thagaisal tamilar Award: sankaraiah gets the honour What is the meaning of thagaisal, Know Here Thagaisal Meaning: தமிழ்நாடு அரசு அறிவித்த ’’தகைசால் தமிழர்’’ விருது : ’’தகைசால்’’ என்றால் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/28/5c354eac72f910fb7a60e9db58305b80_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன்படி தகைசால் தமிழர் விருதிற்கான விருதாளரை தேர்வு செய்யும் பொருட்டு முதல்வர் தலைமையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் அடங்கிய குழுவையும் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதுடன், ஆண்டுதோரும் தகைசால் தமிழர் விருதிற்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
தகைசால் விருதினை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்ட தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை எட்டிய தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் விதமாக தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் விருது அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். என். சங்கரய்யா விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூபாய் 10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என சங்கரய்யா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ’’தகைசால்’’ என்ற சொல்லின் அர்த்தம் என்ன என்பதை பலரும் இணையதளத்தில் தேடி வருகின்றனர். தகைசால் என்ற சொல்லின் அர்த்தம் என்ன என்பது குறித்து தமிழறிஞர்களிடம் ஏபிபி நாடு செய்தி நிறுவனம் கேட்டபோது, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் விளம்பிநாகனார் என்பவரால் இயற்றப்பட்ட பதினென்கீழ்கணக்கு நூலான நான்மணிக்கடிகை பாடலில் ’’தகைசால்’’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நான்மணிக்கடிகை நூலானது ஒரு வைணவ இலக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்
தனக்குச் தகைசால் புதல்வர் -மனக்கினிய
காதல் புதல்வருக்கு கல்வியே -கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு"
என்ற நான்மணிக்கடிகை பாடலில் தகைசால் என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டுள்ளது. தகைசால் என்பதற்கு பண்பில் சிறந்தவர் என்று பொருள் எனவும் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)