Temple Jewellery: கோயிலுக்கு தேவையற்ற நகைகள் மட்டுமே உருக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
திருக்கோயில்களுக்கு மன்னர்கள், ஜமீன்தார்கள் நன்கொடையாக அளித்த சிறுநகைகளைக் கூட நாங்கள் தொட மாட்டோம். பாரம்பரியமாக தெய்வங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்ட நகைகளையும் உருக்க மாட்டோம்
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் இருப்பில் உள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி சுத்த தங்க கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்து, திருக்கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
முன்னதாக, இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், "இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் அடிப்படையில் தங்க நகைகளை காணிக்கை செலுத்து வருகின்றனர். திருக்கோயிலுக்கு தேவைப்படும் நகைகளைத் தவிர, பயன்படுத்தப்படாமல் இருக்கும் இதர நகைகளை உருக்க முடிவு செய்துள்ளோம். மும்பையில் இருக்கும் ஒன்றிய அரசின் உருக்காலைகளில் உருக்கப்பட்டு, தங்கக்கட்டிகளாக மாற்றப்படும். இதை, தங்க பணமாக்கல் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வோம். அதில் வரும் வட்டித்தொகையைக் கோயில் திருப்பணிகளுக்கு மட்டுமே முறையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன். " என்று தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் இருப்பில் உள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி சுத்த தங்க கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்து, திருக்கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகப்படுத்துதல். https://t.co/KSFyVB5Tcz pic.twitter.com/dYvu4E26os
— P.K. Sekar Babu (@PKSekarbabu) September 29, 2021
மேலும் கூறிய அவர், " திருக்கோயில்களுக்கு மன்னர்கள், ஜமீன்தார்கள் நன்கொடையாக அளித்த சிறுநகைகளைக் கூட நாங்கள் தொட மாட்டோம். பாரம்பரியமாக தெய்வங்களை அலங்கரிக்கப் பயன்படுத்ப்பட்ட நகைகளையும் உருக்க மாட்டோம். உடைந்த, பயன்படுத்த முடியாத சிறிய நகைகள் தான் உருக்க இருக்கிறோம். இதற்காக, மதுரை மண்டலத்துக்கு ஓய்வுபெற்ற சென்னை நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு சென்னை நீதிபதி ரவிசந்திரபாபு, சென்னை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராஜு ஆகியோர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்படும். இந்தக் குழுவின் மூலம், கோயில்களில் பயன்படுத்தாமல் இருக்கும் நகைகளை மீட்டு அவை உருக்கப்படும். ஒட்டுமொத்த செயல்முறையும் காணொளியில் பதிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
திருக்கோயிலுக்கு சொந்தமான 5,30,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. திருக்கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள “தமிழ்நிலம்” மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
அவற்றுள் தற்போது முதற்கட்டமாக 3,43.647 ஏக்கர் நிலங்கள், முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் 'அ' பதிவேடு / நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியன பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள நிலங்களில் 72 விழுக்காடு ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது