Tauktae Cyclone | டவ்-தே புயல் எவ்வளவு தீவிரமடைந்திருக்கிறது? டவ்-தே பெயர்க்காரணம் என்ன?
அரபி கடலில் உருவான காற்றத்தாழ்வு பகுதி அதிதீவிர புயலாக மாறி நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலுக்கு டவ் தே புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரபி கடலில் உருவான காற்றத்தாழ்வு பகுதி தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயல் தற்போது கோவாவிலிருந்து தென்மேற்கு திசையில் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து தெற்கு திசையில் 490 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத்தின் வெராவல் பகுதியின் தெற்கிலிருந்து 730 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த அதிதீவிர புயல் வரும் 18ஆம் தேதி அதிகாலை போர்பந்தர் மற்றும் பாவ்நகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டவ் தே புயல் என்றால் என்ன? டவ் தே என்ற பெயர் எப்படி வந்தது? அதிதீவிர புயல் என்றால் என்ன?
டவ் தே என்ற பெயரை மியான்மர் நாடு கொடுத்துள்ளது. அந்த நாட்டு மொழியில் டவ் தே என்றால் கிக்கோ என்ற ஒரு உள்ளூர் பல்லி வகை ஆகும். இந்தப் புயலின் பெயர் ஆங்கிலத்தில் 'Tauktae' என்று இருந்தாலும் இதனை 'டவ் தே' என்று அழைக்க வேண்டும்.
The SCS “Tauktae” intensified into a VSCS, lay centred at 0230 hrs IST of 16th May about 150 km southwest of Panjim-Goa, 490 km south of Mumbai, 730 km SSWest of Veraval (Gujarat). cross Gujarat coast between Porbandar & Mahuva (Bhavnagar district) around 18th May early morning.
— India Meteorological Department (@Indiametdept) May 16, 2021
இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை 2004-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதை இந்தியா,பங்களாதேஷ், மாலத்தீவுகள், மியான்மர், ஓமான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து இணைந்து ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி இந்த நாடுகள் அனைத்து தலா 13 பெயர்கள் கொண்ட ஒரு செட் பட்டியலை வெளியிடும். அந்தப் பட்டியலில் இருந்து சுழற்சி முறையில் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படும். தற்போது டவ் தே என்ற பெயர் மியான்மர் கொடுத்த தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
அதேபோல் புயல்கள் காற்றின் வேகத்தை வைத்து பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி
- காற்றழுத்த தாழ்வு பகுதி- காற்றின் வேகம் மணிக்கு 50-61 கிலோ மீட்டர் வரை இருக்கும்.
- புயல்- காற்றின் வேகம் மணிக்கு 62-88 கிலோ மீட்டர் வரை இருக்கும்.
- தீவிர புயல்- காற்றின் வேகம் மணிக்கு 89-117 கிலோ மீட்டர் வரை இருக்கும்.
- அதிதீவிர புயல்- காற்றின் வேகம் மணிக்கு 118-166 கிலோ மீட்டர் வரை இருக்கும்.
- கடும் புயல்- காற்றின் வேகம் மணிக்கு 166-221 கிலோ மீட்டர் வரை இருக்கும்.
- சூப்பர் புயல்- காற்றின் வேகம் மணிக்கு 221 கிலோ மீட்டருக்கு மேல் வீசும்.
தற்போது டவ் தே புயல் அதிதீவிர புயலாக உள்ளது. இதனால் காற்றின் வேகம் 118-166 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். ஏற்கெனவே வரும் 18-ஆம் தேதி வரை அரபி கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.