TASMAC Death: சாலை விபத்தால் 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் இறப்பு: மதுக்கடைகளை மூடுக - அன்புமணி
சாலை விபத்தால் 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்குக் காரணமான மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
சாலை விபத்தால் 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்குக் காரணமான மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 17,473 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 2017-ஆம் ஆண்டில் தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் இறந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணம் மதுக்கடைகள் தான் என்பதை அரசு நன்றாக உணர்ந்திருந்தும் அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
2022-ஆம் ஆண்டு சாலைவிபத்துகளில் உயிரிழந்தவர்களில் 68 விழுக்காட்டினர், அதாவது, 12,032 பேர் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் நிகழ்ந்த விபத்துகளில் இறந்தவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் மாவட்ட சாலைகள், ஒன்றிய சாலைகள், கிராம சாலைகள் ஆகியவற்றில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்கள். சாலை விபத்துகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
முதன்மையான காரணம்
சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கூட, முதன்மையான காரணம் மதுக் கடைகள் தான் என்பது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் உண்மை ஆகும். இதை அறிந்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டிருந்த 3321 டாஸ்மாக் மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் 90 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகளை பாட்டாளி மக்கள் கட்சி மூடியது. அதன்பின்னர் மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகி விலக்கு பெற்றதால் பின்னாளில் அந்த மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு தான் நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.
மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் 20% முதல் 25% வரை குடித்து விட்டு ஊர்தி ஓட்டுவதால் ஏற்படுபவை ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மது போதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து காட்டப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இதையும் கருத்தில் கொண்டால் தமிழ்நாட்டில் நிகழும் சாலை விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை மது போதையால் நிகழ்ந்தவையாகும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் கூடுதலான சாலை விபத்துகள் நடக்கின்றன. அவற்றில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான சாலைவிபத்துகளுக்கு மதுக்கடைகள் தான் காரணம் எனும் போது, அவற்றை மூடுவது தான் மக்கள்நலன் காக்கும் செயலாக இருக்க முடியும். ஒருபுறம் மதுக்கடைகளை, அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலைகளில் மிக அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறந்து விட்டு, சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவது ஒன்றுக்கொன்று முரணான செயல் ஆகும்.
நெடுஞ்சாலை, மாவட்ட சாலை மதுக்கடைகளை மூடுக
சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நினைத்தால், ஒரே ஆணையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு ஆணையிடலாம். குறைந்தபட்சம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், மாவட்ட சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மட்டுமாவது மூடும்படி ஆணையிடுவதுதான் சிறந்த செயலாகும். அதைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுக்கடைகள் எந்த வகையிலும் மக்கள் நலனுக்கானவை அல்ல. தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படாத மக்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட கொள்கை ஆகும். எனவே, இனியும் காலம் கடத்தாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.