Tancet Exam 2024: டான்செட் & சீட்டா நுழைவுத்தேர்வு - ஜனவரி 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
Tancet Ceeta Exam 2024: டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், ஜனவரி 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tancet Ceeta Exam 2024: கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லாவிட்டாலும், டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத்தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANCET & CEETA தேர்வு:
2024 – 25 ஆம் கல்வியாண்டிற்கான MBA மற்றும் MCA பட்டப்படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு எனப்படும் டான்செட் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வின் மூலம் தான், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் தொகுதி கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இத்தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதேபோன்று, ME/M.Tech./M.Arch போன்ற படிப்பில் சேர CEETA Pg எனப்படும் நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதன் மூலமானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை செயல்முறையை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். அந்த கலந்தாய்வு மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
எப்போதிலிருந்து விண்ணப்பிக்கலாம்?
அண்ணா பல்கலை டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்ட அறிவிப்பில், “எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு வருகிற மார்ச் 9ம் தேதி காலையும், எம்.பி.ஏ., தேர்வு மதியமும் நடக்கிறது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் 10ம் தேதி காலை நடைபெறும். தமிழகத்தின் 14 நகரங்களில் தேர்வு நடக்கும். டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு 10ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்ற போதிலும், டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். கூடுதல் தகவல்களை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு....
தொலைபேசி எண்கள்: 044 – 22358314 / 22358289
இ- மெயில் முகவரி: tanceeta@gmail.com