இன்னும் 5 நாட்கள் தான்... தமிழகத்தை நோக்கி வரப்போகிறது புயல்.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்னும் 5 நாட்களில் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்கள் தமிழகத்திற்கு நல்ல மழையைகொடுத்தது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் அடுத்த ஆட்டம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற் வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
இதனையடுத்து வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்
இன்று (18-11-2025) தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநக தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை நெருங்கி வரும் மழை
இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், சென்னையில் இன்று காலை சூரிய ஒளி தென்பட்டுள்ள நிலையில், மழைக்கான மேகங்கள் சென்னையை நெருங்கி வந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்கு வடக்கிலும், தெற்கிலும் நல்ல மழை மேகங்கள் வட்டமடிக்க தொடங்கியுள்ளது. இன்று குறைந்தபட்சம் 20-40 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்று இரவு முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் மழையானது தென் தமிழகத்திற்கு மாறும் என குறிப்பிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலுக்கு நகரும் போது தென் தமிழகத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும் போது, ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டுள்ளதால் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது குமரி கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலுக்கு நகர்ந்ததும், அடுத்த 5 நாட்களுக்கு பிறகு (சக்கரம்) புயல் சின்னம் வங்க கடலில் உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.




















