TN Rains: மக்களே! காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - உங்க ஊருல வானிலை எப்படி?
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி முதல் பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாதம் தொடங்கியது முதலே காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல சுழற்சி என பல காரணங்களால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்றும் மழை பெய்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 10, 2024
வடகிழக்கு பருவமழை:
இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் குடையுடன் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனத்தை ஓட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடர்ந்து பரவலாக பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், தமிழ்நாட்டின் முக்கிய நீர்நிலைகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நீர்நிலைகளின் நீர்மட்டத்தை கவனிப்பதுடன் கரைகளை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது.