TN Headlines:தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு! இதோ
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
காஞ்சிபுரத்தில் நாளை மின்வெட்டு .. எங்கெங்கு தெரியுமா மக்களே?
பராமரிப்பு பணிகளுக்காக காஞ்சிபுரம் பகுதியில் நாளை மின் தடை குறித்த அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்வள்ளுர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடூர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களிலும், பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளுர், நாகப்பட்டு ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர் ஆகிய கிராமங்களிலும் 03.07.2024 அன்று புதன்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தெற்கு இரயில்வே புதிய அட்டவணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடபடும் - இரயில்வே அதிகாரிகள் தகவல்
தெற்கு ரயில்வேயின் புதிய இரயில்வே அட்டவணை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்படும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். அந்த அட்டவணையில் புதிய ரயில்கள் இயக்கம், கூடுதல் ரயில் நிறுத்தங்கள், ரயில் இயங்கும் நேரம் மற்றும் ரயில் இயக்கக்கூடிய வேகம் அதிகரிப்பு , மக்கள் அதிகமாக பயணிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் ரயில் இயக்குவது, புதிய நிறுத்தங்கள் உருவாக்குவது உள்ளிட்ட அனைத்தும் அந்த அட்டவணையில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்தாண்டிற்கான அட்டவணை ஜனவரில் வெளியிடப்படுவதால், டிசம்பர் 31-ந் தேதி வரை பழைய இரயில்வே அட்டவணை பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக - திமுக மோதல்... உச்சகட்ட பரபரப்பில் விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் அருள் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர், திமுகவை கண்டித்து அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மீண்டும் குறைய தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 876 கன அடியாக சரிந்தது
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. அணை திறக்கப்படவில்லை என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 227 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1038 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 876 கன அடியாக குறைந்துள்ளது.