RAIN ALERT: மொட்டை மாடிக்கு போகாதிங்க.. செல்ஃபி எடுக்காதிங்க.. கனமழை காரணமாக எச்சரிக்கும் தமிழக அரசு
மாண்டஸ் புயலால் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் மொட்டை மாடி பகுதிகளில் நிற்க வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் குறிப்பிட்ட செயல்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அதன்படி,
செய்யக்கூடாதவை
- இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்
- பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்
- நீர்நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும்போது திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்
- புயல் மற்றும் கனமழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
- புயல் கடக்கும் நேரத்தில் கட்டடங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
செய்ய வேண்டியவை:
- ஆதார் அட்டை , குடும்ப அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்
- பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்
- நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும்போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திருக்காமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும்
- இந்திய வானிலை ஆய்வு மையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சமூக வலைதளங்கள் மற்றும் TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை மட்டுமே பின்பற்றுவதோடு, வதந்திகளை நம்பக்கூடாது
- அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்
- கேஸ் கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை பாதுகப்பான முறையில் அணைத்து வைக்க வேண்டும்
- வீட்டை விட்டு வெளியேறும்போது ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இருக மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்
- வீட்டின் மின் இணைப்பு மற்றும் சுவிட்சுகள் அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
- முதியோர், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தவறாமல் உடன் எடுத்து செல்ல வேண்டும்
- மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள், மருத்துவ கட்டு, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும், என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புயல் நிலவரம்:
முன்னதாக, மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலு இழந்து தற்போது சென்னையில் தென்கிழக்கு 260 கிலோமீட்டர் தொலைவிலும் இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என, மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக, அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையிலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்.டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
பலத்த காற்று வீச வாய்ப்பு:
குறிப்பாக, நாளை காலை நேரத்தில் அதிகாலை முதல் 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் அது மெல்ல மெல்ல குறைந்து நாளை மாலை 30 முதல் 40 சமயங்களில் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும். தென் தமிழக கடலோர பகுதிகளில் மன்னர் வளைகுடா பகுதியில் காற்று அதிகமாக இருக்கும். மீனவர்கள் பத்தாம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்குக்கூடும் என, மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.