தண்ணீர் தராத கர்நாடகா... காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்..!
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை தருமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் தலைதூக்குகிறதா காவிரி விவகாரம்..?
முன்னதாக, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனுமதி வழங்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா மாநிலத்தில் இன்னும் பெய்யவில்லௌ. அதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது.
மேலும், பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க இயலாது. இந்த முறை தண்ணீர் வழங்க வாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. கர்நாடக அரசு இத்தகையான செயல்களை செய்யக்கூடாது எனவும், இதை தடுக்க வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தன.
இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறையாக காவிரியில் திறந்துவிடவில்லை. ” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன்:
மேகதாது விவகாரம் தொடர்பாக இன்று டெல்லி செல்கிறார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இந்த பயணத்தியில் காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் முறையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.