பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு
மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “10 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2வது விமான நிலையம் அமைவதால் பல துறைகள் வளர்ச்சி பெறும். மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து மிகுந்த கவனத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது.
மக்களின் வாழ்வாதாரம், நலன்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். பண்ணூரில் 1,546 குடும்பங்கள், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது விமானநிலைய செயல்பாடுகளுக்கு தடைகள் பரந்தூரில் குறைவாக உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரை அரசு தேர்வு செய்துள்ளது. இதற்காக அங்கு 13 கிராமங்களில் இருந்து 5300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்தித்து பேசினார். அப்போது, ”பரந்தூர் விவசாயிகளிடம் இருந்து எனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளேன். விவசாயிகளுக்கு நான் என்றும் துணை நிற்பேன்.
மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலை அமைவதை தமிழக அரசு எதிர்த்ததை வரவேற்கிறேன். அதே நிலைப்பாட்டை பரந்தூர் விவகாரத்தில் அரசு ஏன் எடுக்கவில்லை. விமான நிலையத்தையும் தாண்டி அவர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது.
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விமான நிலையம் வேண்டாம் என்றும் கூறவில்லை. பரந்தூரில் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். வேறு இடத்தில் அமைக்கலாம். விவசாய நிலங்களை அழிப்பதை ஏற்க முடியாது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டால் அது சென்னைக்கே பேராபத்தாக முடியும்” என பேசினார்.
இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.





















