ABVP Protest | ஏபிவிபி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு - மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு மருத்துவர் சுப்பையா ஆதரவு தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஏபிவிபி அமைப்பின் போராட்டத்திற்கு முன்னாள் தலைவரான மருத்துவர் சுப்பையா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏபிவிபியின் முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீதான புகாரில் விசாரணை நடைபெற்று மறு அறிவிப்பு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மருத்துவர் சுப்பையா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் தலைவராக பணியாற்றி வருகிறார். அரசு பணியில் இருந்து கொண்டு முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தவர்களுக்கு இவர் உதவியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது மருத்துவ கல்வி இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னதாக போராட்டத்தின்போது, மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் முதலமைச்சர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 29 பேரையும் பிப்ரவரி 28வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இவர்கள் முன் ஜாமின் கோரி வழக்கும் தொடர்ந்துள்ளனர். இது ஒரு புறமிருக்க கைதான 32 பேரில் 12 பேர் பெயரை மாற்றிக்கூறியும், பொய்யான வீட்டு முகவரியைக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வழக்கு வரக்கூடாது என்பதற்காக, தங்களது பெயரை மாற்றிக் கூறியிருக்கின்றனர். அடையாள அட்டையை வைத்து பெயரை பரிசோதிக்காமல் அவர்கள் கூறிய பெயரிலேயே காவல்துறையினரும் அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஆனால் மாஜிஸ்திரேட் விசாரணையின் போது அவர்கள் பெயரைக்கூறியுள்ளனர். பெயர் மாற்ற சிக்கலால் கோபமடைந்த நீதிபதி போலீசாரிடம் கடுமை காட்டியதாக தெரிகிறது. இதனிடையே வழக்ககறிஞரின் கருத்துக்களைப் பெற்ற காவல்துறை தற்போது மீண்டும் ஒரு புதிய எப்ஐஆர் ஒன்றை பதிவு செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருவள்ளூர் மாணவி தற்கொலை குறித்து அண்ணாமலை