Mk Stalin Speech: “தொடர்ந்து கண்காணிப்பேன்.. சிறு தவறென்றாலும் நடவடிக்கை” - கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சியில் எங்காவது சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: -
உள்ளாட்சி பொறுப்புக்கு தேர்தல் நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். இது சாதாரண வெற்றி அல்ல, இதுவரை கழகம் கண்டிராத வெற்றி, அப்படிப்பட்ட வெற்றியை பெற்று உள்ளோம். அந்த வெற்றியை பெற்ற பிறகு எனது முதல் சுற்றுப்பயணமாக, தூத்துக்குடியில் உங்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறேன். இவ்வளவு பெரிய வெற்றியை காண்பதற்கு நம்முடைய தலைவர் கலைஞர் இல்லையே என்ற ஏக்கம் என் உள்ளத்தில் ஆழமாக பதிந்து இருந்தது. இதோ, தூத்துக்குடியில் மாவட்ட கழகத்துக்கு முன்னால் நிற்கிறேன் வாடா என்று என்னை இங்கு அழைத்து, அதன் மூலமாக திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. அந்த வாய்ப்பை வழங்கி இருக்க கூடிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை காணிக்கையாக்க விரும்புகிறேன்.
தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலையை அவரது மறைவுக்கு பிறகு முதன் முதலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைத்தோம். அதன்பிறகு, அவரது குருகுலமாக விளங்கி கொண்டு இருக்கக்கூடிய ஈரோட்டில் திறந்து வைத்தோம். அவரை உருவாக்கிய அண்ணன் பிறந்த காஞ்சீபுரத்தில் திறந்து வைத்தோம். அதற்கு பின்னால் அவரது மூத்த பிள்ளையாக கருதக்கூடிய முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தோம். இன்றைக்கு தலைவர் கலைஞரின் அருமை தம்பியாக, பாசத்துக்கு உரிய தம்பியாக விளங்கிய பெரியசாமி பிறந்த மண்ணில், அவரால் உருவாக்கப்பட்ட மாவட்ட கழக அலுவலகத்துக்கு முன்னால், தலைவர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டிடத்துக்கு முன்னால், உங்கள் அனைவரின் சார்பில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்து இருக்கிறோம் என்றால், அவரது வழி நின்று, அவர் எந்த உணர்வோடு பாடுபட்டாரோ, பணியாற்றினாரோ, எதையெல்லாம் கற்று தந்து உள்ளாரோ, அதையெல்லாம் நாங்கள் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகத்தான் இதனை கருதிக் கொண்டு இருக்கிறேன்.
பல பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு இருக்கக்கூடிய உள்ளாட்சியில் மேயர்களாக, துணை மேயர்களாக ,மாநகராட்சி உறுப்பினர்களாக, பேருராட்சி தலைவர், துணைத்தலைவர்களாக, உறுப்பினர்களாக, ஊரகப்பகுதியில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ளவர்ளுக்கு மட்டுமல்ல, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அமைச்சராக இருக்கும் நாங்களாக இருந்தாலும் சரி, முதல்-அமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும், இன்று எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி என்னவென்றால், அறிஞர் அண்ணா அடிக்கடி எடுத்து சொல்வது உண்டு. மக்களிடம் செல், மக்களோடு பணியாற்று, மக்களோடு மக்களாக இருந்து வாழ் என்று கற்றுத்தந்து உள்ளார். அதனை உணர்ந்து நாம் கடமையாற்ற, கலைஞரின் உருவச்சிலையை திறந்து வைத்து உள்ள இந்த நேரத்தில் நாம் அத்தனை பேரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, நான் சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று, மேயராக பொறுப்பேற்றேன். அப்போது அந்த மாநகராட்சி கூட்டத்தில் ஏற்புரையாற்றுவதற்காக ஒரு பேச்சை தயாரித்தேன். அதனை சரியாக இருக்கிறதா என்று முதல்-அமைச்சராக இருந்த கலைஞரிடம் காண்பித்தேன். அதனை ஒருமுறைக்கு, இருமுறை படித்து பார்த்து இரண்டு இடங்களில் திருத்தினார். அதில் என்ன திருத்தினார் என்றால், நான் மேயர் பதவி என்று எழுதி இருந்தேன். அதனை மேயர் பொறுப்பு என்று திருத்தினார். மக்கள் தந்து இருப்பது பதவி அல்ல, மக்கள் தந்து இருப்பது பொறுப்பு. அதனை உணர்ந்து பணியாற்று என்று கூறினார். அதைத்தான் இன்று பொறுப்பேற்று உள்ள அனைவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டு உள்ளேன். உறுதியோடு கூறுகிறேன், எங்காவது ஒரு சிறு தவறு நடந்தாலும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருப்பேன். கண்காணிப்பது மட்டுமல்ல உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மிரட்டுவதற்காக அல்ல, அச்சுறுத்துவதற்காக அல்ல, மக்கள் நம்மை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும் அதற்காகத்தான்.
நம்முடைய கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கி ஒப்படைத்தோம். அங்கு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறு நடந்த காரணத்தால் நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், கூனி குறுகி நிற்கிறேன். ஆகையால் அந்த தவறை செய்தவர்கள் உடனடியாக திருந்த வேண்டும். ராஜினாமா செய்து விட்டு வர வேண்டும். இல்லையென்றால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினேன். இது செய்திக்காகவோ, கூட்டணி கட்சியினரை திருப்தி படுத்துவதற்காகவோ அல்ல. தவறு செய்தவர்களை மிரட்டுவதற்காக அல்ல. நிச்சயமாக, உறுதியாக அவர்கள் செய்த தவறை உணர்ந்து திருந்தவில்லையென்றால் உரிய நடவடிக்கையை நான் எடுப்பேன் என்பதை தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்த உள்ள இந்த நேரத்தில் நான் உறுதி எடுத்து கொண்டு இருக்கிறேன். அந்த உணர்வோடுதான் தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.