தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்..
நாகப்பட்டினம் மாவட்டத்தின் உதவி ஆட்சியராக இருந்த காலத்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்த நாகூர் தர்காவில் இவர் இரவு முழுக்கத் தங்கியதும், கடவுள் சிலை ஊர்வலத்துடன் இவரும் நடந்தே சென்றதும் இன்றளவும் பேசப்படும் நல்லிணக்கத்துக்கான உதாரணம்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் இறையன்பு ஐ.ஏ.எஸ். புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றதைத் தொடர்ந்து தற்போது இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கூடங்களில் பரிசுப் புத்தகங்களை வென்று படித்து, புத்தகங்களின் மீதான தனது பேரார்வத்தைத் தணித்துக்கொண்ட சிறுவன் பின்னாளில் மாணவர்களையும் தன் மாநிலத்தையும் நேசிக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாகிறான். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராகப் பொறுப்பெற்றிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். கடந்து வந்த பாதையை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். கழிவென்று ஒதுக்கப்படும் பிரச்சனைகளைக் களமிறங்கி தீர்த்துவைப்பது இவரது தனிச்சிறப்பு. கடலூர் மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராகப் பதவி வகித்த காலத்தில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கச் செய்தார். ’கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’ என இவர் கொடுத்த பயிற்சி அவர்களை மீண்டும் கைதியாக்காமல் சமூகத்தில் உழைக்கும் மனிதர்களாக நடமாடச் செய்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் உதவி ஆட்சியராக இருந்த காலத்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்த நாகூர் தர்காவில் இவர் இரவு முழுக்கத் தங்கியதும், கடவுள் சிலை ஊர்வலத்துடன் இவரும் நடந்தே சென்றதும் இன்றளவும் பேசப்படும் நல்லிணக்கத்துக்கான உதாரணம்.
நிர்வாகத்தைப் பொறுத்தவரை இவர் பணியாற்றாத பதவிகளே இல்லை எனலாம்.1995ம் ஆண்டு நிகழ்ந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின் தனி அலுவலராகச் செயல்பட்டார். நகராட்சி நிர்வாக இணை ஆணையர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்,செய்தி மற்றும் சுற்றுலாத்துறையின் செயலர், முதல்வர் அலுவலகத்தின் கூடுதல் செயலர்,பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலர், பொருளியல் துறையின் முதன்மைச் செயலர்,தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறையின் முதன்மைச் செயலர் என பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்.
இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில்தான் தறியில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்தார். கடலூரின் கூடுதல் ஆட்சியராக இவர் இருந்த காலத்தில்தான் பெண்களுக்கான ஆட்டோ ஓட்டும் பயிற்சி முதன்முதலில் நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் உழவர் சந்தை செயல்படுத்தப்பட்டதிலும், மினிபஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலும் முக்கிய பங்காற்றினார் இறையன்பு. இவர் சுற்றுச்சூழல் செயலராக இருந்த காலத்தில்தான் மாநிலத்திலேயே முதன்முறையாகச் சுற்றுச்சூழல் கொள்கை வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பிறந்த இறையன்பு தமிழ்நாடு அரசு அதிகாரியாக மட்டுமல்லாமல் தனிநபராகவும் தன்னை செதுக்கிக்கொண்டவர் எனலாம். விவசாயத்தில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம், உளவியலில் முதுகலைப் பட்டம், வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம் என கல்வியின் மீது பெருங்காதல் கொண்டு பட்டங்களைக் குவித்தவர். 1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
என்கிறார் வள்ளுவர்.
கல்வியின் மீதான பேரன்பைச் சிலாகிக்கிறது இந்தக் குறள். கல்வியின் மீதான இறையன்பின் பேரன்பு அதனைத் தன்னிடம் மட்டும் பொத்தி வைத்துக்கொள்ளாமல் மாணவர்களிடம் எடுத்துச் செல்லவைத்தது.மாணவர்கள் ஆர்வங்கொண்டு ஆட்சிப்பணிக்கு வரவேண்டும் என்பதற்காக ’ஐ.ஏ.எஸ்.தேர்வும் அணுகுமுறையும்’, ’படிப்பது சுகமே’, ’ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என பல புத்தகங்களை எழுதினார். நாவலாசிரியர், சிறந்த பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முகத்தன்மை இந்தப் பரிவான முகத்துக்கு உண்டு.