TN Rain Alert: 4 மாவட்ட மீட்பு பணிக்காக முப்படைகளின் உதவியை கோரிய தமிழ்நாடு அரசு! தலைமைச் செயலாளர் பேட்டி
TN Rain Alert: தூத்துக்குடியில் மழைநீர் வடிய தாமதமாகலாம் என, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா,
ஒரே நாளில் ஒரு ஆண்டிற்கான மழை:
“நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துள்ள வரலாறு காணாத மழைப் பொழிவால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது. நெல்லையில் விரைவில் தண்ணீர் வடிந்து விடும். தூத்துக்குடியில் தண்ணீர் வடிய கொஞ்சம் தாமதமாகலாம். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சூலூர்பேட்டை விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளது.
முப்படைகளின் உதவியை கோரிய தமிழ்நாடு அரசு:
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 7,500 பேர் மீட்கப்பட்டு ஆங்காங்கே அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது” என தெரிவித்தார்.