ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெற முடியுமா? என்பதற்கு தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களின் அத்தியாவசிய தேவையான மருத்துவ சேவைக்காக மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக மக்களுக்காக முதலமைச்சர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆயுஷ்மான் திட்டம்:
2008ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஸ்வத்திய பீமா யோஜனா என்ற திட்டத்தை அப்போதைய மத்திய அரசு தொடங்கியது. அந்த திட்டம் பின்னர் தேசிய சுகாதார திட்டமாக மாற்றப்பட்டு பின்னர் 2018ம் ஆண்டு ஆயுஷ்மான் திட்டமாக மாற்றப்பட்டது.
70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காப்பீடு:
2018ம் ஆண்டு ஆயுஷ்மான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த பிறகு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டமும் – ஆயுஷ்மான் திட்டமும் இணைக்கப்பட்டது. மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற முடியும் என்று இருந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் முதியவரகள் பலன் பெறும் வகையில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு தனியாக ரூபாய் 5 லட்சம் வரை சிகிச்சைக்கு பெற முடியும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் பெற முடியுமா?
ஆனால், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறுவதில் சிரமம் உள்ளதாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், “ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் வயது வரம்பின்றி ரூபாய் 5 லட்சம் என்ற அளவில் சிகிச்சை பெறலாம்.
ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ரூபாய் 5 லட்சத்திற்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், அந்த திட்டத்தின் கீழ் இங்கு சிகிச்சை பெற முடியாது. ஆனால், பிற மாநிலங்களில் சிகிச்சை பெறலாம். இதுதொடர்பான தமிழக அரசு எந்த வழிகாட்டுதலையும் இதுவரை வெளியிடவில்லை.”
இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் அட்டை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு எந்தவித வருமான வரம்பும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதே அளவுகோல் ஆகும்.