TN Spurious Liquor Death: கள்ளச்சாராயம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு; சி.பி.சி.ஐடி. விசாரணைக்கு மாற்றப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்..!
கள்ளச்சாராயம் அருந்தி 11 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராய விற்பனை தடுப்பு தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் கூறினார்.
அப்போது பேசிய அவர், ”செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த வசந்தா, க/பெ ராஜா (வயது 50). செல்வம், த/பெ செல்வம் (வயது 35), மாரியப்பன், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் (வயது 65) மற்றும் சந்திரா. க/பெ வள்ளியப்பன் (வயது 60) ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையும். அதிர்ச்சியும் அடைந்தேன்.
இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் சித்தாமூர் காவல்நிலைய உதவிஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் துரைபாண்டியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு
சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் த.மோ அன்பரசன் முன்னதாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறினார்.
நேரில் ஆறுதல்
இதற்கு முன்னதாக விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இதுவரை 202 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 121 பேர் சொந்த பிணையில் விடிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதிரடி நடவடிக்கையால், 5 ஆயிரத்து 901 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஆயிரத்து 106 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அலுவலக அறிக்கை வெளியிட்டது, அதில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.