Ajith VS Vijay: விஜய்யை வீழ்த்த அஜித்தான் ஆயுதமா? அரசியல் கட்சிகள் போடும் கணக்கு!
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் போட்டி நடிகரான அஜித்குமாருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். தமிழில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அஜித்குமார் நடிகராக மட்டுமின்றி ட்ரோன் வடிவமைப்பாளர், துப்பாக்கிச் சுடும் வீரர், கார்பந்தய வீரர் என பன்முகத் திறன் கொண்டவர்.
அஜித்திற்கு குவியும் வாழ்த்து:
தற்போது முழுவீச்சில் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் சர்வதேச அளவு கார்பந்தயத்தில் வெற்றிகளை பெற்று வருகிறார். இந்த சூழலில், அவருக்கு திரையுலகினர், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காரணம் என்ன?
அஜித்குமார் தனக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை, தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்திருந்தாலும் அவரது ரசிகர்களின் வாக்குகள் முக்கியமாக கருதப்படுகிறது. அஜித்தின் சக போட்டி நடிகரான விஜய் தவெக-வைத் தொடங்கி அரசியல் களத்தில் குதித்து தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், அவரது போட்டி நடிகரான அஜித்தின் ரசிகர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

இதன் எதிரொலியாக அஜித்குமாரின் வெற்றிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா பாராட்டுக்களை சமீபகாலமாக தெரிவித்து வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றோர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் வாக்குகள் யாருக்கு?
அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்துகளின் பின்னணியில் இருப்பது தமிழ்நாட்டில் உள்ள அஜித் ரசிகர்களின் வாக்குகளே என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விஜய் யாருக்கு எதிராக அரசியல் களத்தில் காய் நகர்த்துகிறாரோ, அந்த கட்சியினரே பெரும்பாலும் அஜித் ரசிகர்களின் வாக்குகளை கவர வியூகம் வகுத்து வருகின்றனர்.
அதேசமயம், தவெக-வினரும் அஜித் ரசிகர்களின் வாக்குகளை கவர விதம், விதமாக முயற்சித்து வருகின்றனர். இதன் எதிரொலியாகவே விஜய் பங்கேற்கும் பரப்புரை, கூட்டங்களில் ஆங்காங்கே விஜய் - அஜித் இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படங்களும், பேனர்களும் காணப்பட்டு வருகிறது.

எதுவாகினும் அஜித்குமார் நேரடியாகவோ, மறைமுகமாகவே அரசியல் தொடர்பான கருத்தை தெரிவிக்கப்போவதில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அஜித் ரசிகர்களே தீர்மானிப்பார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது கரூர் சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவமாக மாறியுள்ள நிலையில் விஜய்யை மறைமுகமாக சாடும் வகையில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். சத்யராஜ் மிகவும் ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தார். திரையுலகம் விஜய்க்கு ஆதரவாக எந்தவொரு கருத்தையும் அவர் கட்சி தொடங்கியது முதலே தெரிவிக்காமல் இருந்து வரும் நிலையில், திரையுலகத்தின் உச்சநட்சத்திரமான அஜித் ரசிகர்களை அவருக்கு எதிராக திருப்ப அரசியல் காய்களை சில கட்சிகள் தொடர்ந்து நகர்த்தி வருகின்றனர்.





















