Corona Cases Spike: காஞ்சிபுரத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு எத்தனை மணிவரை பேருந்துகள் இயங்கும்?
வெளிமாநிலம், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்றவாறு தங்களுடைய பேருந்து பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள்கொண்டு வருவதற்காக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பொதுமக்களின் வெளியூர் செல்லும் சேவைகள் தடைபடாமல் இருப்பதற்காக அதிகாலை 4 மணி முதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவால், சென்னை மட்டுமின்றி பிற நகரங்களில் உள்ள தொழிலாளர்களும், பொதுமக்களும் தங்களது சொந்த ஊருக்கு இன்று அதிகாலை முதலே சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்திலும் இன்று அதிகாலை முதல் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பட்டுப்புடவைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்திற்கு பட்டுப்புடவை வணிகத்திற்காக தினசரி ஆயிரக்கணக்கானோர் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிமாவட்டத்தில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் பேருந்து சேவைகளையே பயன்படுத்துகின்றனர். அவர்களின் சேவைகளை கருத்தில் கொண்டு சென்னையைப் போன்றே, காஞ்சிபுரத்தில் இருந்தும் பெங்களூர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் புதிய உத்தரவை அடுத்து, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் செல்லும் பேருந்துகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காஞ்சிபுரத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கான கடைசி பேருந்து மதியம் 3 மணிவரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. அதேபோல, திருப்பதிக்கும் கடைசி பேருந்து இரவு 8 மணிவரை மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, காஞ்சிபுரத்தில் இருந்து வெளியூர்களான திருச்சிக்கு மதியம் 3.15 மணி, சேலத்திற்கு 2.30 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 6 மணி, விழுப்புரத்திற்கு இரவு 7 மணி, சென்னை, வேலூர் செங்கல்பட்டு பகுதிகளுக்கு இரவு 8 மணிவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்றவாறு தங்களுடைய பேருந்து பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.