Cauvery Water: காவிரி மேலாண்மை ஆணையத்தில் 24,000 கன அடி நீர் திறக்க வலியுறுத்த திட்டம்.. தமிழ்நாடு அதிகாரிகள் தகவல்..
காவிரி மேலாண்மை ஆணையத்திடம், காவிரியில் இருந்து 24 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட கோரிக்கை முன்வைக்கப்போவதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது, முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது. இன்று கூடும் இந்த கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், இதனால் தமிழ்நாடு அதிகாரிகள் கூட்டத்தின் பாதியிலேயே வெளிநடப்பு செய்ததாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இது ஒருபுறம் இருக்க கர்நாடக அரசின் இந்த போக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு எந்த வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது? என்பதையும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும் செப்டம்பர் 1ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையும், கரநாடக அரசு விடுத்த கோரிக்கையும் விசாரித்து முடிவெடுப்பதற்காக காவிரி மேலாணமை ஆணையம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில், காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த கோரிக்கைக்கு எதிராக வெறும் 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கூடும் கூட்டத்தில் இரு தரப்பினருக்கு காரசாரமான விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Senthil Balaji Case: பிணை கோரி செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்..