Nilgiri Summer Festival 2021: நீலகிரி கோடை விழா மீண்டும் ரத்து; ரசிக்க ஆளின்றி ஏங்கும் லட்சக்கணக்கான பூக்கள்!
தற்போது 5 இலட்சம் மலர் செடிகளில் இலட்சக்கணக்கான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண பூக்களை கண்டு இரசிக்க ஆளில்லை.
கோடை காலங்களில் மலைப்பிரதேசங்களில் தஞ்சமடைவது என்பது பெரும்பாலானோரின் விருப்பமாக இருந்து வருகிறது. அதிலும் மலைகளின் அரசியான நீலகிரிக்கு ஏப்ரல், மே மாதங்களில் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுப்பர். ஆண்டு தோறும் சுமார் 40 இலட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் நீலகிரி சுற்றுலா தலங்கள் கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியினால் களையிழந்து காணப்படுகின்றன.
ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோடை விழா இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 2 ம் தேதி முதல் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா வருவாயை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கானோர் வருமானம் இன்றி பரிதவித்து வருகின்றனர்.
இந்தாண்டு கோடை விழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் நீலகிரி தோட்டக்கலைத் துறை உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மலர்க் கண்காட்சிகளை நடத்த தோட்டக்கலைத் துறை திட்டமிட்டு இருந்தது. இதற்காக பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. பல்வேறு வகைகளை சேர்ந்த 5 இலட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன. தற்போது 5 இலட்சம் மலர் செடிகளில் இலட்சக்கணக்கான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண பூக்களை கண்டு இரசிக்க ஆளில்லை. மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் எவருமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினரிடம் கேட்ட போது, “ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்தாண்டு கொரொனா தொற்று காரணமாக கோடை விழா இரத்து செய்யப்பட்டது. ஆனாலும் மலர் கண்காட்சியை கண்டு இரசிக்க முன்களப்பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வந்ததால் இந்தாண்டு கோடை விழா நடைபெறும் என எதிர்பார்த்தோம். அதற்காக 5 இலட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. கடந்த 6 மாத கால பராமரிப்பு காரணமாக தற்போது இலட்சக்கணக்கான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. எதிர்பாராத விதமாக இரண்டாவது அலை பரவல் காரணமாக இந்தாண்டும் கோடை விழா இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பூக்களை கண்டு இரசிக்க ஆட்களில்லை. சுற்றுலா பயணிகள் பூக்களை கண்டு இரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்வர். அதனைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். இந்தாண்டும் அந்த மகிழ்ச்சி எங்களுக்கு கிடைக்கவில்லை” என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
கோடை விழாக்கள் ரசிப்பதற்கு மட்டுமின்றி, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரிதும் உதவி வந்தது குறிப்பிடத்தக்கது.