Tamil Nadu NEET 2021 | ஏ.கே.ராஜன் குழுவிற்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் மாணவி மனு..!
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு எதிராக பா.ஜ.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் இந்த தேர்வுகள் நடத்தப்படும் காரணத்தால் தமிழக மாணவர்களால் நீட் தேர்வுகளில் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டது. நீட் தேர்வு அச்சம், தோல்வி காரணமாக சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களால் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பெரும் எதிர்ப்பு உள்ளது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதன்படி, தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தங்களது ஆய்வறிக்கையை ஒரு மாதத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள இந்த குழுவிற்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகி கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்துள்ள வழக்கில், மாணவர்களின் நலனுக்கு எதிராக மாநில அரசு இந்த குழுவை அமைத்துள்ளதாகவும், இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாத என்று கூறியதுடன் இதுதொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், ஏ.கே.ராஜன் குழுவிற்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகி கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தினி என்ற மாணவி வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், மாணவர்கள் பிரச்னையில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்றும், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு ஆய்வு செய்து முடிவுகளை அரசிடமே அளிக்க உள்ளது. யாருடைய உரிமைகளும் இதில் பாதிக்கப்படப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவி தொடர்ந்துள்ள இந்த வழக்கில் அவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராக உள்ளார். திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு பா.ஜ.க. தவிர மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க. சார்பில் தொடரப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் குழுவிற்கு எதிரான வழக்கு அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்றும், பா.ஜ.க. இரட்டை வேடம் போடுகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.