RSS rally: இதுதான் பிரச்சனை.. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ், விசிக ஊர்வலத்திற்கு நோ சொன்ன காவல்துறை..!
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசிக சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கும், விசிக சமூக நல்லிணக்க மனிதசங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, 50 இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்துத்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளிடம் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், இராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, புதுக்கோட்டை, திருவள்ளூர் உட்பட இன்னும் சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் பல மாவட்டங்களில் காவல்துறையினர் அனுமதி தர மறுத்து வருகின்றனர். இதே நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி சமூக நல்லிணக்கப்பேரணி நடத்துவதாக விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விசிகவின் மனிதச்சங்கிலி பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதையடுத்து, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
View this post on Instagram
திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தமிழக உள்துறை செயலாளர் டி ஜி பி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறி ஆர் எஸ் எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர் எஸ் எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த 22 ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில், தங்கள் அணிவகுப்பு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், அதுபோல எந்த மனுவும் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதை கேட்ட நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிலாக தமிழக அரசின் நிராகரித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினார்.
ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, வழக்கை தாக்கல் செய்து எண்ணிடும் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.