Heat Wave: வெயிலில் தத்தளிக்கும் தமிழ்நாடு; 112 டிகிரி ஃபாரன்ஹீட்டால் கொதிக்கும் கரூர்; அவதியில் மக்கள்!
கோடை காலம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பதிவாகும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கியது முதல் நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலைவீசும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இதில் இன்று அதாவது மே மாதம் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. இதில் உட்சபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. கடுமையான வெயிலினால் மக்களும் பிற உயிரினங்களும் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாகிவருகின்றனர்.
வழக்கத்தைவிட வாட்டி வதைக்கும் வெயில்
வெயில் காலம் வந்துவிட்டாலே மக்கள் தங்களை அதற்காக தயார் படுத்திக் கொள்வார்கள். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கேதுவாக வானிலை ஆராய்ச்சி மையமும் தனது ஆய்வுகளை வெளியிடும். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னர் இருந்தே தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் பல இடங்களில் போதிய அளவு நீர் இல்லாமல் விவசாய பயிர்கள் கருகிவருகின்றது, இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும் வெயில் காரணமாக முன்கூட்டியே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தமிழ்நாட்டிலேயே கரூரில் அதிகப்படியாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல் ஈரோட்டிலும் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
வெயில் நகரமாகவே மாறிவிட்ட வேலூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 25 நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை கடந்து பதிவாகிவருகின்றது.
திருவண்ணாமலை, திருச்சி, திருப்பத்தூர் மற்றும் தர்மபுரியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சேலம், அரக்கோணம், திருத்தனி ஆகிய பகுதிகளில் 108 டிகிர் ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் திருவள்ளூர், மதுரை மற்றும் மதுரை விமானநிலையத்தில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.