TN on Covid19 : கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து - அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுபவர்களிடமும் அந்த மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சில இடங்களில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைகளில் தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களை காக்க, தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களும் அயராது தங்களது உயிரைத் துச்சமென மதித்து அரும் பணியாற்றி வருகின்றனர்,
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றி வரும் அனைவருடனும் தமிழக அரசு தோளோடு தோள் நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் பணிபுரிந்து வருபவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையையும் முதல்வர் உத்தரவுப்படி அரசு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சில நோயாளிகள் உயிரிழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும் சில தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது. இந்த சூழலில், உணர்ச்சி வசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்து கொள்வது அவர்கள் ஆற்றி வரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும் பெரும் சேவைகள் செய்து வரும் நிலையில், ஒரு சில மருத்துவமனைகளில் பேரிடர் சூழலைத் தவறாக பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்கக்கூடிய அதே நேரத்தில் பொதுமக்களிடம் அதிகக்கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கைககள் எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது.தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின்படி, நடவடிக்கை எடுத்து இந்த மருத்துவமனைகளில் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்ள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : 'மாத்திரை சாப்பிடக்கூட தண்ணீர் இல்லை' – கொரோனா நோயாளிகள் அவதி