Thozhi Womens Hostel: தமிழ்நாடு முழுவதும் குறைவான கட்டணத்தில் அரசு பெண்கள் விடுதிகள்; இதோ முகவரி... சேர்வது எப்படி? முழுத் தகவல்
Thozhi Womens Hostel: தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மாவட்டங்களில், பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மாவட்டங்களில், பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை அமைந்துள்ள பகுதிகள் குறித்தும், அவற்றில் சேர்வது எப்படி என்றும் விளக்கமாகக் காணலாம்.
சென்னை மாவட்டத்தில் அடையாறில் , 2வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகரில் தோழி (Thozhi Womens Hostel) பெண்கள் விடுதி இயங்கி வருகிறது.
என்ன தூரத்தில்?
அடையாறு பேருந்து பணிமனை- 0.4 கி.மீ.
சென்னை விமான நிலையம் - 12.9 கி.மீ
மின்ட் மருத்துவமனை - 0.35 கி.மீ.
காவல் நிலையம் - 0.35 கி.மீ.
ஐஐடி சென்னை - 2.7 கி.மீ.
சென்னை தோழி விடுதியில் ஒருவர் தங்கும் அறை, 2 பேர், 4 பேர், 6 பேர் தங்கும் அறைகள் என மொத்தம் 98 படுக்கை வசதிகள் உள்ளன.
அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில், எண்.6, 4வது தெரு, டிபென்ஸ் காலனி, நெல்லிக்குப்பம் ரோடு (சார் பதிவாளர் அலுவலகம் அருகில்), நந்திவரம், கூடுவாஞ்சேரி- 603 202 என்ற முகவரியில் தோழி விடுதி இயங்கி வருகிறது.
பேருந்து நிலையம் - 1.5 கி.மீ.
ரயில்வே நிலையம் - 4.7 கி.மீ.
காவல் நிலையம் - 4.6 கி.மீ.
நந்திவரம் அரசு பொது மருத்துவமனை - 3 கி.மீ.
கூடுவாஞ்சேரி தோழி விடுதியில் இருவர் தங்கும் அறை (ஏசி, ஏசி அல்லாத அறைகள் ), 4 பேர் தங்கும் அறைகள் என மொத்தம் 120 படுக்கை வசதிகள் உள்ளன.
அதேபோல பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 9 நகரங்களிலும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முகவரிகளையும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்தும், https://www.facebook.com/photo?fbid=202385226102005&set=pcb.202385502768644 என்ற இணைய முகவரியில் விரிவாகக் காணலாம்.
பிற விடுதிகள் எங்கே?
சென்னையில் உள்ள பிற பெண்கள் விடுதிகள் குறித்து முழுமையாக அறிய https://chennai.nic.in/hostel/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
தோழி விடுதிகளில் சேர்வது எப்படி?
குறைந்த கட்டணத்தில் விடுதிகளில் பணிபுரியும் மகளிர் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், வாடகையோடு 1 மாத வாடகைத் தொகை அளவுக்கு, முன்கூட்டியே காப்புத் தொகை பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்
பெண்கள், இந்த விடுதிகளில் 15 நாட்களுக்குக் குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம். வாடகையோடு, திரும்பப் பெற முடியும் பாதுகாப்புக் கட்டணத்தைச் செலுத்தி, ஒரு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். இதற்கு ஒரு நாள் வாடகையோடு ரூ.1000 தொகை வழங்கப்படும். இருவர் தங்கும் அறையில், கூடுதல் கட்டணம் செலுத்தி தனியாகவும் தங்கிக் கொள்ளலாம்.
தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது techexe@tnwwhcl.in என்ற இ-மெயில் முகவரிக்கு இமெயில் அனுப்பி, கூடுதல் விவரங்களை அறியலாம்.
முழுமையான விவரங்களுக்கு: http://tnwwhcl.in என்ற இணையதளத்தைக் க்ளிக் செய்து, விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய தகவல்களைப் பெறலாம்.