(Source: ECI/ABP News/ABP Majha)
Mid Day Meal Scheme : மதிய உணவு திட்டம்: செலவின தொகையை உயர்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!
உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், தாளிப்பு பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உணவூட்டுச் செலவினம் தற்போது வழங்கப்பட்டு வருவது மற்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் கண்டுள்ளவாறு:
வரிசை எண். | இனம் | தற்போது வழங்கப்பட்டு வரும் உணவூட்டு செலவினம் | உயர்த்தி வழங்கப்பட்டுள்ள உணவூட்டு செலவினம் |
பருப்பு பயன்படுத்தும் நாள்கள் பருப்பு /பருப்பு பயன்படுத்தாத நாள்கள் | அனைத்து நாள்களும் | ||
ரூபாயில் | ரூபாயில் | ||
1) | காய்கறி | 0.96/1.10 | 1.33 |
2) | உப்பு மற்றும் தாளிதம் | 0.30/0.45 | 0.46 |
3) | எரிபொருள் | 0.26/0.26 | 0.60 |
மொத்தம் | 1.52/1.81 | 2.39 |
இவ்வாறு, உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.4114 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 இலட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்.
திட்டத்தின் வரலாறு:
1982 ஆம் ஆண்டில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், பள்ளிகளில் மாணவர் வருகையை தக்க வைத்தல், , அதே நேரத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். பசி அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தையால் முழுமையாக ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனை கருத்தில் கொண்டு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்கள், மதராசாக்கள் மற்றும் சர்வ சிக்ஷா அபியான் கீழ் செயல்படும் மக்தாப்களில் பத்தாம் வகுப்பு வரையிலான தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு சூடான சமைத்த மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
திட்டத்தின் நோக்கங்கள்:
1. எல்லோருக்குமான தொடக்கக் கல்வி என்ற நோக்கில் மாணவர் சேர்க்கையை முழு அளவில் அதிகரித்தல் , பள்ளி இடைநிற்றல் விகிதங்களைக் குறைத்தல்.
2.குறைவான உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல்.
3.பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளை தவறாமல் பள்ளிக்குச் செல்ல ஊக்குவித்தல் மற்றும் முறையான கல்வியைப் பெற அவர்களுக்கு உதவுதல்.
4.வேலை வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்.