Abdul Kalaam | மனிதநேயம் குறித்த பேசிய பள்ளி மாணவருக்கு புதிய வீடு.. சொன்னதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின்..
நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும்.
மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்ற தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று துறை அமைச்சர் என்ற முறையில் நேற்று தொலைபேசி வாயிலாக உத்திரவிட்டார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவின் பேரில் இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டேன். நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும். பின்னர் யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை பரிசாக வழங்கினேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அப்துல் கலாமின் குடும்பத்தினர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தங்களுக்கு வீடு இல்லை என்று கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன்.
— M.K.Stalin (@mkstalin) February 24, 2022
சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர். pic.twitter.com/foXzlA1UeE
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்