![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
National Education Policy | எங்கு சென்றாலும் தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்துகிறார் தமிழக ஆளுநர்: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக ஆளுநர் எங்கு சென்றாலும் தேசியக் கல்விக் கொள்கையை வலியுறுத்தி வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
![National Education Policy | எங்கு சென்றாலும் தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்துகிறார் தமிழக ஆளுநர்: அமைச்சர் அன்பில் மகேஷ் Tamil Nadu Governor RN Ravi emphasizes national education policy wherever he goes: Minister anbil mahesh National Education Policy | எங்கு சென்றாலும் தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்துகிறார் தமிழக ஆளுநர்: அமைச்சர் அன்பில் மகேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/afab99875e31ce50bf816439e094118e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக ஆளுநர் எங்கு சென்றாலும் தேசியக் கல்விக் கொள்கையை வலியுறுத்தி வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.9.60 லட்சம் மதிப்பில் கைக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, இன்று திருச்சியில் நடைபெற்றது. அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
’’மாவட்டத்துக்கு 10 மாதிரிப் பள்ளிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள், தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
தென் மாவட்டப் பள்ளிகளில் அங்கீகாரம் புதுப்பிக்காததால் ஊதியம் கிடைக்காதது உட்பட பள்ளிக் கல்வித்துறையில் சுமார் 12 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது பள்ளிக் கல்வி ஆணையர் கவனம் செலுத்தி வருகிறார். வழக்குகள் முடிவுக்கு வரும்போது கல்வித் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு கிடைக்கும். தமிழக ஆளுநர் எங்கு சென்றாலும் தேசியக் கல்விக் கொள்கையை வலியுறுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கம் திட்டம் உள்ளது. இதற்காக அண்மையில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவில் யார் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து இறுதி அறிக்கை அனுப்பப்படும். அது கிடைத்தவுடன், விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும். அப்போது, தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நமது நிலைப்பாடு தெரியும்.
ஆசிரியர்கள் பணி மாறுதல் தொடர்பான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தற்போது 2,774 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பணி நிரவல் முடிந்த பிறகு, தேவையான இடங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அடிப்படைக் கல்வியில் குறிப்பாக 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியல்ல. மழலையர் வகுப்புகளில் செயல்பாடுகள் சார்ந்த மாண்டிசோரி திட்டம் கொண்டு வரும் திட்டமும் உள்ளது.’’
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)