Cyclone Michaung: ”தமிழ்நாடு அரசின் செயல்பாட்டினால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு”- பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழு பாராட்டு
மத்திய அரசு அனுப்பியதில் ஒரு குழு முழுக்க முழுக்க வட சென்னையையும், ஒரு குழு மத்திய சென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தையும் ஆய்வு செய்தது. மற்றொரு குழு திருவள்ளூரை ஆய்வு செய்தது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த வாரம் மிக்ஜாம் புயலினால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது. இந்நிலையில் புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு ரூபாய் 5 ஆயிரத்து 60 கோடி வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக கேட்டது. அதற்கு மத்திய அரசு தரப்பில் முதல் கட்டமாக ரூபாய் 450 கோடி வழங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் மத்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிட்டார். இந்நிலையில், இன்று மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்தது. இதில் ஒரு குழு முழுக்க முழுக்க வட சென்னையையும், ஒரு குழு மத்திய சென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தையும் ஆய்வு செய்தது. மற்றொரு குழு திருவள்ளூரை ஆய்வு செய்தது.
இதில் மத்திய சென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தினை ஆய்வு செய்த மத்திய அரசு அனுப்பிய ஆய்வுக் குழுவின் தலைவர் சிட்டி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், ”பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் நாங்கள் தமிழ்நாட்டிற்கு வெள்ளபாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம். சென்னைக்கு புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் நடந்தது மிகவும் மோசமான ஒன்று. குறிப்பாக புயல் கரையைக் கடந்த பின்னர் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் மோசமாக உள்ளது. பாதிப்புகள் இருந்தாலும் தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தின் போது அவர்கள் அவர்களால் முடிந்த அளவிற்கு மிகச் சிறப்பாக பணியாற்றி பெரும் பாதிப்பில் இருந்து சென்னையை காப்பாற்றி உள்ளனர். அதற்காக தமிழ்நாடு அரசினை பாராட்டுகின்றேன். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் பாதிப்பு என்பது மிகக் குறைவாக நடைபெற்றுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் பெரும் பாதிப்பினை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கும்.
மழைநீர் வடிகால் கட்டமைப்பு என்பது கடந்த 2015 வெள்ளத்தின் போது இருந்ததை விடவும் மிகச் சிறப்பாக உள்ளது. அதனால் தான் சென்னை விமான நிலையம் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மின்சாரம் கூடுமானவரை விரைவில் வழங்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புச் சேவை விரைவாகவே சீர் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு அரசினை மத்திய ஆய்வுக் குழு சார்பாக பாராட்டுகின்றேன். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என கூறியுள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த புயலினால் வெள்ள நீர் மட்டம் உயர்வுதான் பெரும் பிரச்னையாக இருந்துள்ளது. மழைநீர் வடிகால் வாரிய கட்டுமானம் சிறப்பாக இருந்தாலும் கடல் வெள்ள நீரினை உள்வாங்காததால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பினை சென்னை சந்தித்துள்ளது. நாங்கள் மூன்று நாள் ஆய்வுக்காக வந்துள்ளோம். மாநில அரசிடம் பாதிப்புகள் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்கும்படி கேட்டுள்ளோம். எனது தலைமையிலான குழு மத்திய அரசின் 6 அமைச்சகங்களில் இருந்து வந்துள்ளோம். நாங்கள் விரைவில் மத்திய அரசிடம் வெள்ள பாதிப்புகள் தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிப்போம் எனக் கூறினார்.