(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
Chennai Air Show 2024: சென்னை வான் சாகச நிகழ்ச்சிக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
Chennai Air Show 2024: சென்னை வான் சாகச நிகழ்ச்சிக்கு விமானப்படை கோரியதற்கு மேலாகவே, அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசல் - தவித்த மக்கள்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமானப்படையின் சார்பில், வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. திறந்தவெளியில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டு இருந்தனர். ஆனால், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் திக்குமுக்காடினார். நூற்றுக்கணக்கானோர் மூச்சு திணறியும், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமலும் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசு முறையான திட்டமிடலுடன் செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்:
இந்நிலையில் வான் சாகச நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். அதில், “சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.