TN Corona Lockdown LIVE: தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : வெறிச்சோடிய சாலைகள்..! உடனுக்குடன் தகவல்கள் உள்ளே..!
தமிழ்நாட்டில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் அமலில் உள்ள முழு ஊரடங்கின் போது நிகழும் முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

Background
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இன்றைய தினத்தில் பொதுப்போக்குவரத்து சேவை, மெட்ரோ சேவைகள், அத்தியாவசிய கடைகள் ஆகிய இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் உணவுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் நேற்று நள்ளிரவு முதலே மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள், பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஊரடங்கு அமலில் உள்ள இன்று தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் மீதும், வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் அனைத்து நாட்களும் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழு ஊரடங்கு நாள் தவிர பிற நாட்களில் பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு தினங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கிலும் அடங்காமல் சுற்றித்திரியும் இரு சக்கர வாகன ஓட்டிகள்...!
தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. ஆனாலும், சென்னை உள்பட முக்கிய நகரங்கள், கிராமப்புறங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வழக்கம்போல அங்குமிங்கும் சுற்றித்திரிந்து வருகின்றனர். தலைநகர் சென்னையிலும் உள்புற பகுதிகளில் குறுகலான சந்துகளில் இரு சக்கர வாகனங்களின் நடமாட்டத்தை தொடர்ந்து காண முடிந்தது.
உஷாராகிய குடிமகன்கள்..! ஒரே நாளில் ரூபாய் 217.96 கோடிக்கு மது விற்பனை....!
தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், நேற்றைய தினம் வழக்கத்தை விட மதுபானக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் மட்டும் ரூபாய் 217.96 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.





















