New Manipur Governor: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்: பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்!
தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் இல.கணேசன் மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் நியமனம். இங்கு ஆளுநர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலிருந்த தமிழிசைக்கு அடுத்தபடியாக இரண்டாவது நபராக இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்படுகிறார். பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராகவும் இல.கணேசன் இருந்து வருகிறார்.
தஞ்சாவூரை சொந்த ஊராக கொண்ட இல.கணேசனுக்கு தற்போது 78 வயதாகிறது. சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தான் இல.கணேசனை மணிப்பூரின் புதிய ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
மத்திய பிரதேச ராஜ்யசபா எம்.பி., ஒருவர் மறைந்ததையடுத்து அவர் வகித்த ராஜ்சபா பொறுப்பு இல.கணேசனுக்கு 6 மாதம் வழங்கப்பட்டது. பாஜகவின் மாநில மற்றும் மத்திய பொறுப்புகளில் தொடர்ந்து அங்கம் வகித்த இல.கணேசன், கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக. நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவே முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தலின் போது எம்.எல்.ஏ.,க்களை கட்சிக்கு பெற்றுத் தரும் மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் வழங்கப்படும் என அன்றைய மாநில தலைவர் முருகன் அறிவித்தார். அதன் படி, இன்று தமிழ்நாட்டில் உள்ள நான்கு மாவட்ட தலைவர்களுக்கு பாஜக சார்பில் இனோவா கார் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் இல.கணேசனுக்கு மணிப்பூர் ஆளுநர் பொறுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமருக்கு நன்றி தெரிவித்த இல.கணேசன்!
தன்னை மணிப்பூரின் ஆளுநராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு இல.கணசேன் நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு வழங்கிய பணியை உரிய முறையில் செய்வேன் என்றும், தனக்கு இந்த வாய்ப்பு வழங்கிய குடியரசுத்தலைவர் உள்ளிட்ட அனைவரும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு இல.கணேசன் தொலைபேசி வழியாக நன்றி தெரிவித்தார்.
குவியும் வாழ்த்துக்கள்!
இந்நிலையில் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் நான் பெரிதும் போற்றும் அண்ணன், திரு இல.கணேசன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 22, 2021
(File photo) pic.twitter.com/IozuujMpzI